சதித்திட்டம் தீட்டினார்களாம்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் இருவர் பதவியிலிருந்தும் கட்சியினால் இடை நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியின் அதிகாரங்கள் கட்சித் தலைமைத்துவத்தினால் குறைக்கப்பட்டமைக்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தெல்தோட்டையைச் சேர்ந்த மௌலவி எச்.எம்.எம்.இல்லியாஸ் மற்றும் சம்மாந்துறையைச் சேர்ந்த மௌலவி ஏ.எல்.எம்.கலீல் ஆகிய இருவருமே இடைநிறுத்தி வைக்கப்பட்டவர்களாவர். கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ காதரினால் மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸுக்கு இடைநிறுத்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.கலீல் தானும் அரசியல் உயர்பீட பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை தனக்கு அவ்வாறான கடிதம் கிடைக்கபெறவில்லை என ‘விடிவெள்ளி’க்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் ‘விடிவெள்ளி’ மௌலவி எச்.எம்.எம். இல்லியாஸைத் தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்.
‘கடந்த சனிக்கிழமை பாலமுனையில் நடைபெற்ற ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். மாநாட்டில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது எமக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நான் கட்சியின் அரசியல் உயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டிருந்தேன்.
நான் பாலமுனை தேசிய மாநாட்டுக்காக எங்கள் ஊரிலிருந்து பஸ் ஒன்றில் 45 பேரை அழைத்துச் சென்றிருந்தேன். மேடையிலும் அமர்ந்திருந்தேன். கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் இருவரை உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கியுள்ளதாக பகிரங்கமாக கூறினார்.
கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் தலைவருக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஹசன் அலி எனது வீட்டுக்கு வருகை தந்து கலந்துரையாடினார்.
கடிதத்தில் நானும் 19ஆவது நபராக கையொப்பமிட்டேன். எனக்கு முன்பதாக 18 பேர் கையொப்பமிட்டிருந்தனர். ஆனால் ஏனையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது 19 ஆவது நபராக கையொப்பமிட்டுள்ள எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டிருந்த எனக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறித்து நான் கவலையடைகிறேன் என்றார்.
இதேவேளை தேசிய மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியும் கலந்துகொள்ளவில்லை.
ஹசன் அலிக்கு எதிராக என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பபட வேண்டுமென்பது தொடர்பில் கட்சியின் தலைமைத்துவம் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment