கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுமாயின் அது தொடர்பில் கட்சியினுள்ளே பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்.
கட்சிக்கு வெளியே விமர்சிப்பதாலோ தலைமையை சவாலுக்கு உட்படுத்துவதாலோ எந்தப்பயனுமில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மு.கா. வின் பொதுச்செயலாளர் தேசிய மாநாட்டில் பங்குபற்றாமை தொடர்பில் அவசியமேற்படின் கட்சியின் உயர்பீடம் தீர்மானிக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நீர் தினம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது தேசிய மாநாட்டில் பொதுச்செயலாளர் பங்கேற்காமை, அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக ஊடகவிலாளர்கள் கேள்வியெழுப்பியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் கூறுகையில்,
அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. எதிர்க்கட்சியினுள் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
ஜனநாயகத்தை மதிக்கும், பேணும் கட்சியாகவே மு.கா. உள்ளது. ஆகவே கட்சியின் செயற்பாடுகள் குறித்து பிரச்சினைகள் காணப்படுமாயின் அவை தொடர்பாக கட்சிக்குள்ளேயே பேசித்தீர்ப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன. கட்சியின் தலைமையை விமர்சிக்கும் கருத்துக்களை முன்வைப்பதாலோ அல்லது சவாலுக்கு உட்படுத்துவதாலோ எவ்விதமான நன்மைகளும் ஏற்படப்போவதில்லை.
நடவடிக்கை
மாநாட்டுக்கு வராதவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது அவசியமென்றால் அதனை கட்சி தீர்மானிக்கும். தமக்கென்று தனிப்பட்ட உள்காரணங்கள் காணப்படாதிருக்குமாகவிருந்தால் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு வருகை தந்திருக்க முடியும். ஆனால் அவ்வாறான செயற்பாட்டை அவர்கள் செய்திருக்கவில்லை.
இந்நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது குறித்து கட்சியின் உயர்பீடம் விரைவில் தீர்மானமெடுக்கும்.
பொதுச் செயலாளரின் அதிகாரம்
மு.கா. வின் பொதுச்செயலாளருக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருப்பது தொடர்பில் அவருக்கு பிரச்சினைகள் காணப்படுமாயின் அதனை கட்சிக்குள்ளேயே பேசித்தீர்த்துக்கொண்டிருக்க முடியும். அது தொடர்பாக பகிரங்க கருத்துக்களை வெளியிடவேண்டிய அவசியமில்லை. ஜனநாயகத்தை பேணும் கட்சியென்ற அடிப்படையில் அவருடைய பிரச்சினையை கட்சிக்குள்ளே தீர்ப்பதற்கான நிலைமைகள் உள்ளன. ஆகவே அவர் கட்சியினுள் பேசாது வெளியில் பேசுவதில் பயனில்லை.
குற்றச்சாட்டு
நாம் இஸ்லாமிய கலாசாரங்களை பாதுகாப்பதோடு அவற்றை மிகவும் உயர்ந்த மட்டத்தில் மதிக்கின்றோம். அதேபோன்று ஏனைய கலாசாரங்களுக்கும் மதிப்பளிக்கவேண்டும்.
தற்போது நாட்டில் தேசிய நல்லிணக்கம் தொடர்பாக பேசப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இந்த நாட்டில் காணப்படும் கலாசாரங்களுக்கு மதிப்பளிக்கவேண்டியது மிகவும் முக்கியமான தொன்றாகின்றது. அவ்வாறான நிலையில் அதில் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை.
முஸ்லிம் சமுகத்தினுள் தேவையற்ற கருத்துக்களால் குழப்பங்களை ஏற்படுத்த முயலும் சில தரப்புக்கள் காணப்படுகின்றன. அவை இவ்வாறான கருத்துக்களை பிரசாரம் செய்கின்றன. அது முற்றிலும் தவறானது.
உதாரணமாக ஒரு விடயத்தை உங்களுக்கு கூறுகின்றேன். அந்த மாநாட்டில் ஆதிவாசிகளின் நடனம் இடம்பெற்றது. அது ஆதிவாசிகளின் கலாசாரம். அதனை நாம் மதிக்கவேண்டிய கடப்பாட்டைக்கொண்டிருக்கின்றோம்.
ஆதிவாசிகளின் மரபொன்று காணப்படுகின்றது. அரச தலைவர் வருகை தரும்போது அவருக்கு ஆசீர்வாதம் வேண்டி அவர்களின் பூர்வீக தெய்வமான மலைகடவுளை வழிபடுவார்கள். அதன்பின்னர் தேன் முட்டியுடன் அரச தலைவரை சந்தித்து அவருக்கான கௌரவத்தையளித்து மலைக்கடவுளின் ஆசீர்வாதத்தையும் வழங்குவார்கள்.
இதுவொருபுறமிருக்கையில் ஆதிவாசிகளின் கோரிக்கைகளையேற்று நாம் அவர்களுக்கான குடிநீர்ப்பிரச்சினையை தீர்த்து வைத்தோம். அதற்காக எமக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி செலுத்தவேண்டுமென அவர்கள் கோரியதாலேயே அம்மாநாட்டின் ஊடாக அவர்களுக்கான வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொடுத்திருந்தோம். அது தவறானதொரு விடயம் இல்லையல்லவா?
எல்லை நிர்ணயம்
எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பலமட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். அச்செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்வோம். விரைவில் இறுதி தீர்மானத்தை அறிவிப்போம்.
மஹிந்தவுக்கு ஆதரவில்லை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்தால் அதற்கு ஆதரவளிக்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. கடந்த காலத்தில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தது.
அதற்கான எதிர்ப்புக்களையும் நாம் வெளியிட்டிருந்தோம்.
யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்தவொரு சூழல் ஏற்பட்டிருந்தது.
ஆனால் யுத்தமொன்றை நிறைவு செய்து மற்றுமொரு யுத்தத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தார்கள். அந்தக்கொள்கைக்கு எதிராகவே நாம் புதிய மாற்றத்திற்கான தீர்மானத்தை எடுத்தோம்.
தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர ஐக்கியத்தை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்காக நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு அனைவருடனும் இணைந்து பயணத்தை தொடர்வோம் என்றார்.
ஆனால் யுத்தமொன்றை நிறைவு செய்து மற்றுமொரு யுத்தத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தார்கள். அந்தக்கொள்கைக்கு எதிராகவே நாம் புதிய மாற்றத்திற்கான தீர்மானத்தை எடுத்தோம்.
தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர ஐக்கியத்தை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்காக நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு அனைவருடனும் இணைந்து பயணத்தை தொடர்வோம் என்றார்.

No comments:
Post a Comment