( நூருல் ஹுதா உமர் )
எமது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை விட அமைச்சு பதவி பெரிதான ஒரு விடயம் இல்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் மைத்திரி அலையில் அள்ளுண்டு போனதால் அரசியல் தலைமைகளுக்கு இந்த அரசை அமைக்க எந்தவித ஒப்பந்தங்களும் இல்லாமல் ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டது. அது போன்று இம்முறை செய்ய முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்போன்று நேற்று மாலை பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளை கொண்டு திட்டமிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை செய்து முடிக்க வேண்டும். கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பெரிய இரு இனங்களான சிங்கள, தமிழ் மக்களின் மனோநிலை வேறுவிதமாக இருக்கிறது. நெருக்கடியான இக்கால கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அவசரப்பட்டு எந்த தீர்மானங்களும் எடுக்க முடியாது. கடந்த காலங்களை விட இந்த தேர்தல் கடினமாக இருக்கும் என்பதால் அலசி ஆராய்ந்து பார்த்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவோம்.
பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை அடையாளப்படுத்த இப்போதுதான் ஆரம்பித்துள்ளார்கள். நாங்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ முடியாது. அண்மையில் தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெற்ற மாநாட்டில் தெளிவாக கூறியுள்ளோம் எங்களுடைய திருமண சட்டம், காதி நீதிமன்ற விவகாரம், நிஹாப் பிரச்சினை அடங்களாக பிரதேச ரீதியாக பல பிரச்சினைகள் இருக்கிறது அவற்றை தீர்த்து வைக்க வேண்டும். அதை செய்யாமல் அமைச்சர் பதவியை பெற்று கொள்ள முடியாது. எங்களின் கூட்டு இராஜினாமா மூலம் சர்வதேச அழுத்தங்கள் இந்த நாட்டு பரவலாக வரத்தொடங்கியுள்ளது. எங்களின் ஒற்றுமையான பயணத்தின் மூலம் நாங்கள் எமது நாட்டில் வாழும் முஸ்லிங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்தது.
முஸ்லிங்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அதிகமான பிரச்சினைகள் தேங்கி இருக்கிறது. தோப்பூர் மக்களுக்கான பிரதேச செயலக உருவாக்கத்தை இலக்காக கொண்டு முன்வைக்கப்பட்ட அமைச்சரை பத்திரத்தை கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனும் ஏனைய சில தமிழ் எம்.பிக்களும் தலையிட்டு தடுத்து விட்டார்கள். ஓட்டமாவடி மற்றும் வாழைசேனையில் எமது மக்களின் காணிப்பிரச்சினையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அநீதியாக நடந்து கொள்கிறது.
நேற்றையதினம் களுவாஞ்சிகுடியில் நடந்த கூட்டம் ஒன்றில் பொய்யான பல தகவல்களை இனவாதமாக தமிழ் மக்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பேசியுள்ளார். கல்முனை என்பது 100 வருடங்களுக்கு முன்னரே இருந்து முஸ்லிம் அமைச்சர்கள், தலைவர்களால் வடிவமைக்கப்பட்ட நகரம். தமிழ் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட உப செயலகத்தை அவர்கள் நினைத்தால் போல தரமுயர்த்த அவர்கள் கொண்டுவரும் திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெற நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. பொய்யான பல தகவல்களை ஊடகங்களிடமும், மக்களிடமும் தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரப்பி வருகிறார்கள். அவர்களின் கருத்துக்களால் முஸ்லிம் புத்திஜீவிகளும் கூட சில நேரங்களில் குழம்பி போகிறார்கள். கல்முனையில் யாருக்கும் எந்தவித விட்டுக்கொடுப்புக்களோ அல்லது அநியாயங்களோ நாங்கள் செய்யப்போவதில்லை. இவர்களின் பொய்யான பரப்புக்களை நாங்கள் நம்ப தேவையும் இல்லை. கல்முனை விவகாரம் பற்றிய முன்னெடுப்புக்கள் சம்பந்தமாக என்னிடம் யார் எப்போது வினவினாலும் பதிலளிக்க தயாராகவே இருக்கிறேன்.
முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை மதியாமல் வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர்கள் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க தமது கோரிக்கைகளை புதிய வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாராகி வருகிறார்கள். முஸ்லிம் தரப்பில் நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதாகும். இந்த நல்லாட்சி அரசாங்கத்தினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது இரக்கமும்,பாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. நான் என் மக்களின் உரிமைக்காக போராடும் சண்டைக்காரனாக இருந்து போராடி என்னால் முடிந்த சகல விடயங்களையும் சாதிக்க முயற்சி செய்து வருகிறேன்.
சில நேரங்களில் உரிமை விடயங்களில் எனது சத்தம் உயர்ந்து வந்தால் நான் மஹிந்த அணிக்கு தாவப் போவதாக வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்பட்டு நடப்பவன் நான். சரியா பிழையா என்பதை ஆராய முன்னர் எமது கட்சியின் தீர்மானத்தை மதிப்பவன் தயவு தாட்சணைகள் பார்த்து எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. அந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அங்கு மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Responsive Ads Here
Wednesday, August 14, 2019
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here



No comments:
Post a Comment