
1987ம் ஆண்டைய பிரதேச சபைகள் சட்டத்தின் அடிப்படையில் சாய்ந்தமருதுக்கு என தனியான இயங்கிய 'கரைவாகு தெற்கு கிராம சபை' கல்முனை பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்ட நாளிலிருந்தே உள்ளுராட்சி சபை தரப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை சாய்ந்தமருது மக்கள் வெளியிட்டிருந்தனர்.
ஆனால், இந்தக் கோரிக்கையானது கடந்த சில வருடங்களாகவே குறிப்பாக 2011ம் ஆண்டு கல்முனை மாநகர சபையின் முதல்வராக பதவியேற்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த சிறாஸ் மீராசாஹிப் அவர்களை 02 வருடங்களில் அப்பதவியில் இருந்து நீக்கியமையின் காரணமாகவே தனியான சபைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக இந்தப் பிரதேசத்தின் அடிப்படை அரசியல் அறிவில்லாத சிலர் கருத்து வெளியிடுகின்றனர்.
சுமார் 30 வருட கோரிக்கையை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மழுங்கடிக்க முயல்வதனூடாகவே இந்தக் கோரிக்கை விடயத்தை அவர்களை எவ்வாறு கையாள முற்படுகின்றனர் என்று தெளிவாகப் புலனாகின்றது. கல்முனை தெகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகிய இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வசந்தம் தொலைக்காட்சியில் நடாத்தப்பட்ட அதிர்வு நிகழ்ச்சியில் இது சில வருடகால கோரிக்கை என குறிப்பிட்டிருந்தமையும் இங்கு கருத்திற் கொள்ளத்தகக்து.
இவர்கள் கூறுவது போன்று சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை ஒரு குறுகிய கால விடயமோ அல்லது சிறாஸ் மீராசாஹிபின் பதவி பறிக்கப்பட்டதால் ஏற்படுத்தப்பட்டதல்ல என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.
கல்முனையைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.சம்சுதீன் (கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தருமான ஆரிப் சம்சுதீன் அவர்களின் தந்தை) அவர்கள் பாராளுமன்றத்தில் 1994.03.22 ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
" 1992ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு கணிப்பின்படி 52000ம் வாக்காளர்களைக் கொண்ட கல்முனைத் தொகுதிக்கு ஒரேயொரு பிரதேச சபையே உண்டு. இது இந்நாட்டிலுள்ள மிகப்பெரிய பிரதேச சபையாகும். ஆனால், 30000 சனத்தொகையைக் கொண்ட சாய்ந்தமருது கல்முனையில் இருந்து பிரித்து தங்களுக்கு தனியான ஒரு பிரதேச சபை அமைத்துத் தர முடியாதா என அங்கலாய்க்கின்றனர். அவ்வூர் மக்களின் தேவையைப் பூர்த்திசெய்ய எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. இது தொடர்பாக கௌரவ வர்த்தக வாணிபத்துறை அமைச்சரை (கல்முனையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆம்.எம்.மன்சூர்) இம்மக்கள் பலமுறை சந்தித்துள்ளனர். பல விதமான மகாநாடுகள் பொது நிருவாக அமைச்சருடன் கூடியுள்ளார்கள். ஆனால், கண்ட பலன் எதுவுமில்லை. ஆனால், கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது கௌரவ வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் அவர்கள் கௌரவ பொது நிருவாக அமைச்சர் அவர்களை இக்கிராமத்திற்கு அழைத்துவந்து இக்கிராம மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தால் தேர்தலின் பின் உடனடியாக சாய்ந்தமருது பிரிக்கப்பட்டு அதற்கு தனியான ஒரு பிரதேச சபை அமைத்துத் தருகிறோம் என வாக்குறுதியளித்தார்கள். இதேபோன்று வாக்குறுதி கல்முனை தேர்தல் தொகுதியிலுள்ள தமிழ் மக்களுக்கும் கொடுக்கப்பட்டது. கௌரவ தலைவர் அவர்களே இதனை அரசு செய்ய வேண்டாமென்று நான் கூறவில்லை. நான் கூறுவதெல்லாம் நியாயமான கோரிக்கைக்கு மதிப்புக் கொடுத்து நடைமுறைப்படுத்துங்கள். இக்கிராமம் தனியான ஒரு பிரதேச சபையொன்றைக் கோருவது நியாயமெனக் கண்டால் அதனை நிறைவேற்றிக் கொடுங்கள். அதற்காக பொருத்தமற்ற நிபந்தனைகளை விதிக்காதீர்கள். இதனைச் செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர்கள் வாக்களிக்க கோரும் நிபந்தனையை வையாதீர்கள்" என அவரது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி உரையின்படி 1992ம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற மாகாண சபை தேர்தலிலும், தேர்தல் முடிவடைந்ததும் சாய்ந்தமருதுக்கு சபை வழங்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வாக்குறுதியளிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியாதாகவுள்ளது. அத்துடன் அன்றைய காலப்பகுதியிலும் உள்ளுராட்சி மன்றம் கோரி அமைச்சர்களுடனான சந்திப்புக்களும் நடைபெற்றுள்ளதை புரிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.
2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் சாய்ந்தமருதுக்கான சபையை வழங்குவதாக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்திருந்தும் இதுவரை வழங்கப்படாமலேயே உள்ளது என்பதும் யாவரும் அறிந்த விடயமே.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பொற்காலம் ஆரம்பித்த 1994ம் ஆண்டுக்கு முன்னரே சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றத்தை இந்த மக்கள் கோரியிருக்கின்றனர் என்ற உண்மையை சட்டத்தரணி சம்சுதீன் அவர்களின் பாராளுமன்ற உரையிலிருந்து அறியக் கூடியதாகவுள்ளது.
எம்.ஐ.சர்ஜூன்
சாய்ந்தமருது .
No comments:
Post a Comment